பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்றது. பின்னர் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் கொடிப்படத்துடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அங்கு விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய பூஜை நடந்தது. பின்னர் கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா’, ‘கந்தனுக்கு அரோகரா’ என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரத்துக்கு விசேஷ பூஜை நடந்தது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்த பல்லக்கில் புறப்பாடும், இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 10-ந் திருநாளான 11-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story