இளம்வக்கீல்கள் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுரை


இளம்வக்கீல்கள் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுரை
x
தினத்தந்தி 3 Feb 2020 9:45 PM GMT (Updated: 3 Feb 2020 7:20 PM GMT)

இளம் வக்கீல்கள் தாய்மொழியுடன் ஆங்கில புலமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.

சென்னை, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புதிதாக 409 பேர் வக்கீலாக பதிவு செய்து பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. அப்போது வக்கீல் பதிவுக்குழு தலைவர் கே.பாலு உறுதிமொழி வாசிக்க, புதிய வக்கீல்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-

வக்கீல் தொழிலுக்கு தாய்மொழி பற்றுடன் ஆங்கில புலமையையும் சமமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அது தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு சென்று வழக்காட உதவும்.

வக்கீல் தொழிலை பொறுத்தவரை உங்களிடம் வரும் வழக்காடிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் எடுத்துக்கூறுவதே தொழில் தருமம். வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமே தொழில் தர்மம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை சொன்னால் வெற்றி கிடைக்காது என்ற நம்பிக்கையை உடைத்தெறிய வேண்டும்.

நீதித்துறை குறித்து பல ஆண்டுகளாகவே எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. எனவே புதிய வக்கீல்கள் அறிவுப்பசியுடன் தேடலில் ஈடுபட்டு வியர்வை தாகத்துடன் கடுமையாக உழைத்து நேர்மையான வழியில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீதித்துறையின் எதிர்காலமே உங்களை போன்ற இளம் வக்கீல்கள் தான். குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது மூத்த வக்கீல்களிடம் ஜூனியராக பணியாற்றுங்கள். ஒருபோதும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீலாக மாறாதீர்கள்’ என்றார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன், எம்.தண்டபாணி, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். துணை தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.

Next Story