பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை


பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 6 Feb 2020 9:15 PM GMT (Updated: 6 Feb 2020 5:37 PM GMT)

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

சென்னை, 

மும்பையில் கடல் வழியாக வந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் கடலோர பாதுகாப்பு படை, கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தமிழக உள்ளூர் போலீசாரும் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 17 பேர் டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் டெல்லி போலீசாருக்கும், தமிழக கியூ பிரிவு போலீசாருக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி இருந்தனர். அதில் ‘விரைவில் பதிலடி கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி முதல் சென்னை உள்பட தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக ஊடுருவி வருவார்கள்.

அவர்களை போலீசார் விழிப்போடு செயல்பட்டு மடக்கி பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சமாகும். நேற்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடல்பகுதி வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருவ முயன்ற 4 கடற்படை வீரர்களை சென்னை போலீசார் மடக்கி பிடித்தனர்.

‘ஆப்பரேஷன் சாகர் கவாச்’ என்று இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story