டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக அரசு பணியாளர்கள் 2 பேர் கைது


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக அரசு பணியாளர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2020 8:13 AM GMT (Updated: 8 Feb 2020 8:13 AM GMT)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு பணியாளர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர்,

தமிழக அரசில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன்பு போட்டித்தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்பு அடுக்கடுக்காக பெரும் முறைகேடுகள் அம்பலத்துக்கு வரத்தொடங்கின.  இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக அரசு பணியில் இருப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலமானது. 

இந்த நிலையில் கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலீஸ்  இன்று கைது செய்துள்ளது. 2017ல் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


Next Story