நளினி தொடர்ந்த வழக்கு: ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்


நளினி தொடர்ந்த வழக்கு: ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 10:41 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நளினி தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நான் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். இதனால், சட்டவிரோத காவலில் சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த வழக்கில் மத்திய அரசை நீதிபதிகள் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். இதன்படி, மத்திய அரசும், இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், “நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதை சட்டப்படி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தபின்னரும், 7 பேரையும் சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது.

அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு மாநில கவர்னர் கட்டுப்பட வேண்டும் என பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசே தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதில் கவர்னர் கையெழுத்து போடக்கூட தேவையில்லை. அமைச்சரவையின் முடிவு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். எனவே சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், ‘தமிழக அமைச்சரவை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னர், இந்த விஷயத்தில் எந்தவொரு உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. அவ்வாறு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘தற்போது நளினி சட்டவிரோத காவலில் சிறைக்குள் உள்ளாரா? அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு வருகிற 18-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story