தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ந் தேதி நிறைவு - சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ந் தேதி நிறைவு - சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-15T03:05:46+05:30)

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 20-ந் தேதி நிறைவடையும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்-அமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் அளித்த பேட்டி வருமாறு:-

14-ந் தேதி (நேற்று) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகள் (சனி மற்றும் ஞாயிறுக்கிழமை) அரசு விடுமுறையாகும்.

17-ந் தேதியன்று மீண்டும் சட்டசபை காலை 10 மணிக்கு கூடும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு தொடர்பான இரங்கல் குறிப்பு, அவையில் வாசிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கும். அதில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். 18 மற்றும் 19-ந் தேதியும் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு 20-ந் தேதியன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுவார். அன்று சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். 20-ந் தேதியோடு சட்டசபையின் இந்த கூட்டத் தொடர் நிறைவடையும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் நடத்தப்படும் அரசுத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானியக்கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகிய நிகழ்வுகள் சில வாரங்கள் கழித்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story