ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 30 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 30 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Feb 2020 10:02 PM GMT (Updated: 15 Feb 2020 10:02 PM GMT)

தம்மம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650-க்கும் மேற்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து சரியாக காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர்.

30 பேர் காயம்

காளைகளை ஆவேசமாக மடக்கி பிடித்த இளைஞர்களுக்கும், அவர்களின் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் செல்போன், சைக்கிள், குக்கர், மின்விசிறி, டிரஸ்சிங் டேபிள், பிரிட்ஜ், வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

Next Story