குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு   சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து   தமிழகம் முழுவதும் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2020 12:15 AM GMT (Updated: 2020-02-16T04:43:52+05:30)

சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, 

சென்னை நகரில் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வ நாதன் கடந்த 13-ந் தேதி இரவு உத்தரவு பிறப்பித்தார்.

போலீஸ் தடியடி

இந்த உத்தரவு வருகிற 28-ந் தேதி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக் கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், போலீசாருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் தாம்பரம், ஆலந்தூர், புதுப்பேட்டை, மாதவரம், செங்குன்றம், அமைந்தகரை, மண்ணடி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2-வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் முஸ்லிம்கள் நேற்று மீண்டும் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், ஆம் ஆத்மி தமிழக நிர்வாகி வசீகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

தாம்பரம், திருவொற்றியூர், பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும்

சென்னையில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து திருச்சி, கோவை, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மதுரை ரோட்டில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா பகுதியிலும், கரூரில் தாலுகா அலுவலகம் அருகேயும், பெரம்பலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் காந்திஜி சாலை இர்வின் பாலம் அருகே உள்ள பள்ளிவாசல் முன்பு 700-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு தேசிய கொடியை ஏந்தியபடி போலீசாரை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திடீரென்று மறியலில் ஈடுபட முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரையில் மகபூப்பாளையம், புதூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் மேலப்பாளையம் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடியில் தென்பாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டும், காயல்பட்டினத்தில் புதிய பஸ் நிலையம் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவையில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே முஸ்லிம் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக் கல், கம்பம், பெரியகுளம், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story