சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2020 11:45 PM GMT (Updated: 16 Feb 2020 11:16 PM GMT)

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

சென்னை, 

தமிழக சட்டசபையில் கடந்த 14-ந் தேதி 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப இருக்கின்றன. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த இருக்கின்றன.

நேரமில்லா நேரத்தை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச இருக்கிறார்.

தொடர்ந்து, நாளை (18-ந் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (19-ந் தேதி) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. 20-ந் தேதி (வியாழக்கிழமை) பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

Next Story