குடியுரிமை திருத்த சட்டம்:வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் நடந்த திருமணம்


குடியுரிமை திருத்த சட்டம்:வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் நடந்த திருமணம்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:22 AM GMT (Updated: 17 Feb 2020 10:22 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை  ரவுண்டானா லாலகுண்டா பகுதியில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும், போலீசாரின் தடியடி சம்பவமும் நடந்தது.

இந்த தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் குடியுரிமை திருத்த  சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்

இந்தப் போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக  ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தங்களின் கண்டங்களை மெகந்தி போட்டும் தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக ஷயின்ஷா, சுமையா ஜோடிக்கு  நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.  போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின்அறிவுறுத்தலின்படி மணமக்களுக்கு போராட்டக்களத்தில்  இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியில்
 தெரிவித்தனர்.போராட்டக்காரர்களால் சமைக்கப்பட்ட மதிய உணவு திருமண விருந்தாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது. 

வண்ணாரப்பேட்டையில் போராடி வருபவர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் ஜெயக்குமாரை அவரது சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும் என உறுதியளித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேற்றிரவு சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்பிஆர் சட்டத்தை தமிழகத்தில் அப்படியே அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டம் நீடித்து வருகிறது. திண்டுக்கல்லில் பேக்மபூர் பள்ளி வாசல் அருகே இஸ்லாமியர்கள் 200 க்கும் மேற்பட்டோர் சென்னை தடியடி சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை பணி நீக்கம் செய்யக் கோரி நேற்றிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பழனியில் சின்ன பள்ளிவாசல் முன்பு 500 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில், போலீசார் சமரசத்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

செங்கல்பட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிஏஏ, என்பிஆர். என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story