சீமைக்கருவேல மரங்கள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ‘நீரி’ அமைப்புக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சீமைக்கருவேல மரங்கள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ‘நீரி’ அமைப்புக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2020 8:45 PM GMT (Updated: 2020-02-18T02:03:41+05:30)

சீமைக்கருவேல மரங்கள் குறித்து ‘நீரி’ ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

நிலத்தடி நீர்மட்டத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டவும், இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரப்புரை மேற்கொள்ளவும், இதை இயக்கமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் மேகநாதன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை சீமைக்கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்ட உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சீமைக்கருவேல மரத்தை வெட்ட தடை விதித்தது. தமிழக அரசின் நிபுணர் குழு அறிக்கையை தாக்கல் செய்யவும், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரிக்கவும் பரிந்துரைத்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மேகநாதன் தரப்பில், ‘இந்த ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில் சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டத்துக்கும், நீர்பிடிப்பு பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு எதிர்மறையான பாதிப்புகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி வாதிடப்பட்டது.

ஐகோர்ட்டில் வைகோ, வக்கீல் சீருடையில் ஆஜராகி வாதம் செய்தார். அவர் கூறியதாவது:-

சீமைக்கருவேல மரம் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடானது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு ஊடுருவி, பெருமளவு நீரை உறிஞ்சக்கூடியது. பிராண வாயுவை அதிகமாக உறிஞ்சிக்கொண்டு, கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. இதனால் தான் இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் நிழலுக்குக்கூட ஒதுங்காது. எனவே இம்மரங்களை தமிழகத்தில் இருந்து முற்றாக அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.


சீமைக்கருவேலம் என்கிற வேலிக்காத்தான் மரம் ஆப்பிரிக்கா கண்டத்தில் பிசாசு மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து நான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிற மனுவில், இம்மரம் குறித்து உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் வைத்திருக்கிறேன். இந்தியாவின் பல ஆராய்ச்சி நிறுவனங்களுடைய முடிவுகளையும் வைத்திருக்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, வைகோ கையில் வைத்திருந்த அறிக்கை ஆவணங்களை வாங்கி, அதை படித்து பார்த்தார். இதையடுத்து வைகோ, ‘சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்தியாவில் சிறந்த நிறுவனம் நாக்பூரில் உள்ள ‘நீரி’ அமைப்பாகும் என்று கூறினார்.

வைகோவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமைக் கருவேலம் மரங்கள் குறித்து ‘நீரி’ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இந்த ஆய்வுகளை ‘நீரி’ மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விசாரணை முடிந்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த வைகோ, ‘இது என் வாழ்நாளில் நீதிமன்றங்களில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.

Next Story