தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் - தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் - தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2020 10:00 PM GMT (Updated: 17 Feb 2020 9:22 PM GMT)

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மா.சுப்பிரமணி யன், ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு உள்பட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வழிகோலும்(என்.ஆர்.சி.) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பையும் (என்.பி.ஆர்.) ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி 2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துகளை தமிழக மக்களிடம் பெற்று ஜனாதிபதிக்கு ஒப்படைத்து, முக்கியமான இந்த தேசிய பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெற வைத்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்தி இருப்பதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விடுத்த நியாயமான கோரிக்கையை சர்வாதிகாரத்தனத்துடன் ஏற்க மறுத்ததோடு, குடியுரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய முதல்- அமைச்சர் பழனிசாமிக்கு இந்த கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

என்.ஆர்.சி.க்கு வழிதிறக்கும் என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்த தன்னிச்சையாக அனுமதித்தால் அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து என்.பி.ஆருக்கு எதிராக மக்களை திரட்டி அண்ணா காட்டிய காந்திய அற வழியில் மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை தி.மு.க. நடத்திட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் இந்த கூட்டம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறது.

* அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்துள்ள அரசுப் பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளும், நியமனங்களும் ஊழலுக்குப் புதியதொரு வரலாறு எழுதிட வித்திட்டுள்ளது என்பதற்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாபெரும் மோசடி நடைபெற்று தேர்வுகளின் மீதான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை அ.தி.மு.க. ஆட்சியில் நசுக்கப்பட்டிருப்பதற்கும் இந்த கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பாக 2016 முதல் இன்று வரை நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரித்திட வேண்டும்.

* காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பேன் என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதீர்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரகசியமாக கடிதம் எழுதி கடந்த காலத்தை மறைத்து, எதிர்காலத்தை நினைத்து மண்டியிட்டு கெஞ்சி நிற்பதற்கு மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க. அரசும் பா.ஜ.க. அரசும், காவிரி டெல்டா பகுதி களில் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருக்கும் நூற்றுக்கணக் கான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்துசெய்து விட்டு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அது பொருத்தமாகவும் பொருள் உள்ளதாகவும் வேளாண்மை வளர்ச்சிக்கு பயனுள்ளதாகவும் விவசாயிகளுக்கு நிம்மதி தருவதாகவும் இருக்கும் என்று தி.மு.க. கருதுகிறது. ஆகவே பழையனவற்றை ரத்து செய்துவிட்டு புதியன புகுந்து விடாமல் கதவை இறுக சாத்திவிட்டு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பிற்கான சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Next Story