டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் - ஆர்.சரத்குமார் அழைப்பு


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் - ஆர்.சரத்குமார் அழைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 9:30 PM GMT (Updated: 2020-02-21T02:14:25+05:30)

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் அன்றாட நாட்கள் தொடக்கத்துடன் பின்னிப்பிணைந்த ‘தினத்தந்தி’ நாளிதழை புதிய பரிமாணத்தில் பல்வேறு நகரங்களுக்கு வினியோகிக்கும் அளவிற்கு உயர்த்திய ‘தினத்தந்தி’ நாளிதழின் முன்னாள் அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பத்திரிக்கை, விளையாட்டு, கல்வி, தொழில், ஆன்மிகம் முதலான பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனை புரிந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வரலாற்று சிறப்புமிக்க மணிமண்டப திறப்பு விழா நாளை(சனிக்கிழமை) நடைபெற இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உண்மையான, நேர்மையான, திறமையான உழைப் பினை தலைமுறை கடந்து எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு அளித்திருக்கும் இந்த மாபெரும் அங்கீகாரத்தினை மனதார பாராட்டி வரவேற்கிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டப திறப்பு விழாவில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சின்னைய்யாவின் புகழுக்கு சிறப்பு சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாராட்டும்-நன்றியும் தெரிவிப்பதாக சென்னையில் நடந்த குமரி நற்பணி மன்றத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்து அகில இந்திய நாடார் சக்தி நிறுவன தலைவர் த.விஜயாசந்திரசேகர் உள்பட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என அனைத்து மதத்துக்கும் பொதுவாக ஆன்மிக வள்ளலாக திகழ்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக் கும் நன்றி தெரிவிப்பதாகவும், மணிமண்டப திறப்பு விழாவில் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபத்தை திறக்க வரும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு ஆதித்தனார் மக்கள் பேரவை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் எழுப்பி அவருடைய கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாடார் மகாஜன சபையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு பெருமை சேர்ந்த பா.சிவந்தி ஆதித்தனார் புகழை போற்றும் வகையில் அவரது மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழர்கள் திரளாக அணிதிரள வேண்டும் என அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Next Story