"ரசாயனம் தடவிய மீன்களை விற்றால், உரிமம் ரத்து" - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அதிரடி
உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் அதிரடியாக கூறியுள்ளார்.
மதுரை,
மதுரை கரிமேடு மீன் விற்பனை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் கரிமேடு மீன் சந்தையில் பார்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோமசுந்தரம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரிமேடு மீன் சந்தைக்கு சென்றனர். அவர்கள் அங்கு உள்ள 72 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை பரிசோதனை செய்தனர்.
அப்போது மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர். கரிமேடு சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 டன் மீன்கள், நண்டு மற்றும் இறால்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் உணவு பொருட்களில் கலப்படம் செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் அதிரடியாக கூறியுள்ளார். இனிமேல், இது தொடரக்கூடாது என எச்சரித்தனர்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் பேசிய அதிகாரி சோமசுந்தரம், ரசாயனம் கலக்காத மீன்களை விற்பனை செய்யுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மீன் கடைகளில் நடத்தப்பட்டது போல் மீன்களை ஏற்றி வரும் லாரிகளையும் சோதனை செய்ய உள்ளதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story