நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க எழும்பூர் கோர்ட்டு உத்தரவு


நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 March 2020 12:00 AM GMT (Updated: 4 March 2020 11:54 PM GMT)

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர், திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது, சேலத்தில் 1971-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டது என்று ரஜினிகாந்த் பேசினார்.

இவரது பேச்சு இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி கடந்த ஜனவரி 18-ந் தேதி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந் தேதி புகார் செய்தார். அவரும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், போலீசில் புகார் கொடுத்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே மனு தாக்கல் செய்துள்ளதாக கருத்து கூறினார். இதையடுத்து அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை 2-வது குற்றவியல் கோர்ட்டில் ரஜினிகாந்துக்கு எதிராக உமாபதி வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘ஜனவரி மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் இரு பிரிவினர்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசி உள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் உடனடியாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, ‘இந்த வழக்கிற்கு சென்னை போலீஸ் கமிஷனர், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story