இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை போத்தனூரை சேர்ந்த இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் (வயது 33), நேற்று முன்தினம் இரவு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்்ம ஆசாமிகள் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். அதில் படுகாயம் அடைந்த அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை அறிந்த இந்து அமைப்பினர் ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் முகமது கானியை சிலர் தாக்கினர். அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு இருந்த சிலர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆனந்த் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனந்த் தாக்கப்பட்டது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், சம்பவ இடத்தை ஆய்வுசெய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோவையின் முக்கிய இடங்களான பஸ்நிலையங்கள், ரெயில் நிலையம், விமானநிலையம், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையை அடுத்த கணபதி வேதாம்பாள் நகரில் இதாயத்துல் மசூதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மசூதியின் கதவை பூட்டி விட்டு உள்ளே சிலர் தூங்கி கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மசூதிக்குள் திரியுடன் கூடிய பெட்ரோல் குண்டை மர்ம ஆசாமிகள் வீசினர். அப்போது பாட்டில் உடைந்து விழும் சத்தம் கேட்டது. அதை கேட்டு மசூதியில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது மசூதி வாசலில் பெட்ரோல் சிதறி, திரி பொருத்தப்பட்டு இருந்த ஒரு பாட்டில் உடைந்து கிடந்தது.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினர் வந்து பெட்ரோல் குண்டை மீட்டு அதில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அங்கு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதையடுத்து மசூதிகள், இந்து கோவில்களின் முன்பும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) இந்து முன்னணியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
Related Tags :
Next Story