அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 1,086 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்து உள்ளது.
சென்னை,
சீனாவில் உருவாகி பலரை பலி கொண்ட கொரோனா வைரஸ், மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மற்ற மாநிலங்களுக்கும் இது பரவியதால், நாடு முழுவதும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து விமானத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகா வழியாக சென்னை வந்த பயணிகளை, விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
அப்போது அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது 15 வயது மகனுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அந்த சிறுவனை மருத்துவ குழுவினர் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்தபோது, அவனுக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இது கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், விமான நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக சிறுவனை அவனது தந்தையுடன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ தகவலை தவிர மற்ற தகவலை நம்ப வேண்டாம். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து வந்த காஞ்சீபுரம் என்ஜினீயர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, கடந்த 4-ந் தேதி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு சோதனை நடத்தியதில், கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்தது. எனவே 5-ந் தேதி அவருடைய ரத்த மாதிரியை எடுத்து புனேவுக்கும் மற்றும் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்துக்கும் அனுப்பினோம். 7-ந் தேதி முடிவு வந்தது.
தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரத்யேக ‘வார்டில்’ டாக்டர்கள் குழு சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து வந்த 15 வயது சிறுவனுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. முடிவு தெரிய 48 மணி நேரம் ஆகும்.
இதுவரையில் 68 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. மீதம் உள்ளவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
தற்போது காஞ்சீபுரம் என்ஜினீயர் குடும்பத்தினர்-உறவினர்கள் 8 பேர், அவருடன் பழகியவர்கள், அவர் பயணம் செய்த வாகன ஓட்டிகள் என 27 பேரை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பீதியோ, பதற்றமோ அடைய வேண்டாம். தமிழகத்தை பொறுத்தவரையில் யாரும் முக கவசம் (மாஸ்க்) அணிய தேவை இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு கவசம், முக கவசம் அணிந்து இருப்பார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், வயதானவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்கிற போது முக கவசம் அணிந்து கொள்ளலாம்.
இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 22 ஆயிரத்து 318 பேரை பரிசோதனை செய்து இருக்கிறோம். சீனா, இத்தாலி, ஈரான், ஜப்பான், தென்கொரியா ஆகிய 5 நாடுகளில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
ஒருவருக்கு இருமல், காய்ச்சல் வந்து மூச்சு திணறல் ஏற்படும்போதுதான் கொரோனா பாதிப்பு தெரிய வரும். தியேட்டர், வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் தயாராக வைக்கப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி படுக்கைகள் ஒதுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளன. 10 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமையில் நேற்று கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் 1,086 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் இருந்து வந்த சிறுவனை மருத்துவ கண்காணிப்பில் வைத்து இருக்கிறோம். சென்னை கிங்ஸ் ஆய்வகத்தை தொடர்ந்து, தேனியிலும் கொரோனா நோய்க்கிருமியை கண்டுபிடிக்கும் ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story