நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 March 2020 11:30 PM GMT (Updated: 10 March 2020 11:38 PM GMT)

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. ஆனால், இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் நடத்தலாம். ஆனால், பதிவான ஓட்டுகளை எண்ணக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தலில் தங்களை ஓட்டுபோட அனுமதிக்கவில்லை எனக்கூறி சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ‘கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்கிறேன். நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்த பிறகு, தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது. மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, நடிகர் சங்கத்துக்கு புதிதாக மீண்டும் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை நியமிக்கிறேன். அவர் 3 மாதங்களுக்குள் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை. நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபிறகு அவர்கள் தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவுகள் செல்லாது’ என்று வாதிட்டார்.

விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், ‘நடிகர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 80 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலும் ஓட்டுகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதனால், அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “நடிகர் சங்கத்துக்கு 3 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதற்காக புதிதாக தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும், உறுப்பினர்களை சேர்த்து புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்.

அதேநேரம் நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம். இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும், விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story