கொரோனா வைரஸ் எதிரொலி: ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு


கொரோனா வைரஸ் எதிரொலி: ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2020 5:15 AM IST (Updated: 11 March 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதற்கு ஐ.டி. ஊழியர்களுக்கு, நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, 

சீனாவில் மையம் கொண்டிருந்த உயிர்க்கொல்லியான கொரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே, கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 202-ல் இருந்து 686 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவை தவிர்த்து 104 நாடுகளில் 28 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையிலும் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கட்டப்பட்டுள்ள பிரத்யேக விடுதி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். இதேபோல உடல் உறுப்பு தானம் செய்தல், யோகா மற்றும் முதல் உதவி அளிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் வசந்தாமணி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைதொடர்ந்து சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையோடு இணைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.280 கோடி செலவில் ஒருங்கிணைந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய எழில்மிகுந்த கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் மருத்துவ சேவைக்கு இணையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் இனிமேல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். 1 லட்சத்து 31 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 1,192 பேர் சுகாதார ஊழியர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் மிகவும் நலமோடு இருக்கிறார். அந்த சிறுவன் இன்று (நேற்று) வீடு திரும்புகிறார். 72 பேரிடம் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதில் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 2 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது கேரள மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட இத்தாலிய குழுவினர் 2 பேருடைய ரத்த மாதிரி ஆகும். இதற்கான பரிசோதனை முடிவு நாளை (இன்று) தெரியவரும்.

தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. இதனால் பொதுமக்கள் யாரும் பயமோ, பதற்றமோ அடையத் தேவை இல்லை. முககவசமும் அணியத் தேவை இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின்பேரில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க சுகாதாரத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு இல்லை.

எந்த சவாலையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் குறித்து பரிசோதிப்பதற்காக கிங்ஸ் பரிசோதனை கூடத்துக்கு அடுத்தபடியாக தேனியில் ஒரு பரிசோதனை கூடம் தயார் செய்துவிட்டோம். மேலும் தேவைப்பட்டால் பரிசோதனை கூடம் அமைப்பதற்கு 4 இடங்களையும் தேர்வு செய்துவிட்டோம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலை இல்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சிகிச்சை பெற்று வருபவரும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரசின் தாக்கம் தகவல் தொழில்நுட்ப துறையையும் (ஐ.டி.) விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் சுமார் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் 250 நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் செய்யவேண்டிய பணி தொடர்பான விவரங்கள் இ-மெயில் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதேபோல 95 சதவீத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் சில விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு தங்களுடைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, கைகளை சுத்தமாக கழுவவேண்டும். காய்ச்சல், தொடர் இருமல் இருந்தால் பணிக்கு வரவேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். இதுபோன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story