போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 20-ந் தேதி நடக்கிறது


போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 20-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 11 March 2020 4:41 AM GMT (Updated: 2020-03-11T10:11:53+05:30)

தமிழக போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற 20-ந் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் 14-வது ஊதிய ஒப்பந்த குழுவின் உறுப்பினர் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊதிய ஒப்பந்தத்தில் பணியாளர்களின் ஊதியம், அகவிலைப்படி, இதர படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அதன்படி அரசு போக்கு வரத்து துறையின் சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள நிர்வாக தரப்பிலான குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 14-வது ஊதிய ஒப்பந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story