‘முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ - ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு
கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், தான் முதல்-அமைச்சர் ஆகப்போவது இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். பின்னர் ஊடக நண்பர்களிடம் தெரிவிக்கும்போது, எல்லாம் நல்ல படியாக நடந்தது. எல்லோருக்கும் திருப்தி. ஆனால் எனக்கு மட்டும் ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று சொன்னேன்.
தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் இருப்பதாக சொன்னேன். அது சில ஊடகங்களில் வேறு விதமான விஷயங்கள் வெளிவந்தது. ஆனால் அது மாவட்ட செயலாளர்களிடம் இருந்து வெளிவரவில்லை. இதற்கு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சந்திப்பு. என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும்?. நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு கண்ணோட்டம். கட்சி ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிட்டால் அவர்களுக்கும் ஒரு தெளிவு வரும். எனக்கும் அதன் மூலம் வரும் அதிர்வுகள், தெளிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
1996-ல் இருந்து 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவதாக சொன்னது, 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான். அதற்கு முன்பு நான் அரசியலுக்கு வருவதாக சொன்னதே கிடையாது. எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? என்று கேட்டபோது, ‘அது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது’ என்று சொல்லி வந்தேன்.
இனிமேலாவது 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என்று நான் சொல்வதாக யாரும் கூறவேண்டாம். இனிமேல் யாரும் அப்படி சொல்லமாட்டார்கள் என்று நம்பு கிறேன். 1996-ல் எதிர்பாராதவிதமாக அரசியலில் என் பெயர் அடிபட்டது. அப்போது நான் மிகவும் போற்றும் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், என்னுடைய நெருங்கிய நண்பர் சோ ஆகியோர், ‘ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், அந்த மாதிரி என் தலையில் எழுதி இருந்தால் நான் எந்த மாதிரி அரசியல் திட்டத்தை கொண்டு மக்கள் முன்பாக போக வேண்டும்’ என்று அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன்.
இதற்காக 3 திட்டங்கள் வைத்து உள்ளேன். நான் கவனித்த மிகப்பெரிய 2 கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க. இந்த கட்சிகளின் பூத் கமிட்டி 67 ஆயிரம் தவிர, கிட்டத்தட்ட 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கட்சி பதவிகள் இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் தேவை. தேர்தல் முடிந்த பிறகு அவ்வளவு பதவிகள் தேவை இல்லை.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், இவர்கள் நம்ம ஆளும் கட்சி ஆட்கள் என்று சொல்லி, டெண்டர் முதல் ஒப்பந்தம் எடுப்பது என எல்லாவற்றிலும் ஊழல் நடக்கும். தவறு நடக்கும். மக்களிடம் சரியாக பணம் செல்வதை தடுப்பார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் பல பேர் செய்கிறார்கள். இது ஆட்சிக்கும் கெட்டது. மக்களுக்கும், கட்சிக்கும் ரொம்ப கெட்டது.
சிலர் கட்சி பதவிகளை தொழிலாக வைத்திருக்கிறார் கள். வேறு தொழில் அவர்களுக்கு இல்லை. ஆக நாம் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்தில் எவ்வளவு பதவிகள் தேவையோ, அதனை வைத்துக்கொண்டு தேர்தல் முடிந்த பிறகு அத்தியாவசிய தேவைகளுக்கான பதவிகளை மட்டும் வைத்துக்கொள்வோம். இது தான் என்னுடைய முதல் அரசியல் திட்டம்.
சட்டமன்றத்தில் பார்த்தால், 50, 55, 60, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், வந்தவர்களே மீண்டும் வருகிறார்கள். புதியவர்கள் கிடையாது. புதியவர் கள், நல்லவர்கள் அரசியலுக்கு வருவதே கிடையாது. அரசியல் சாக்கடை என்று நினைத்து, ஒதுங்கி இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது. அப்படி அவர்களுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்று சொன்னால் எம்.எல்.ஏ., எம்.பி., முக்கிய நபர்களின் மகனாக இருக்க வேண்டும்.
ஆனால் என்னுடைய கட்சியில் 60 முதல் 65 சதவீதம் வரை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், படித்தவர்கள், அவர்கள் செய்யும் வேலையில் பெயர் பெற்றவர்கள், தொகுதியில் அவர்கள் வாழும் பகுதியில் நல்ல கண்ணியமான பெயர் பெற்றவர்களுக்கு நான் ‘சீட்’ கொடுக்கிறேன்.
வேறு கட்சியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி நம்முடைய கட்சியில் சேர விரும்புபவர்கள், நன்மதிப்பு உள்ளவர்கள், வெளியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வக்கீல்கள் சமுதாயத்தில் நல்ல பெயரோடு, புகழோடு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு ஏன் வரமாட்டேங்குறாங்க? என்று மக்கள் ஏங்கிக்கொண்டு இருப்பவர்களை, நானே அவர்களின் வீட்டுக்கு சென்று அழைப்பேன். ‘சிஸ்டம்’ கெட்டுப்போய் இருக்கிறது. அதை சரி செய்யலாம் என்று அவர்களை அழைத்து வந்து, மீதமுள்ள 35 முதல் 40 சதவீதத்தை பூர்த்திசெய்வேன். இதில் பெண்களும் அடங்குவார்கள்.
இந்த மாதிரியான புது சக்தி, புது மின்சாரம், புது வெள்ளம், புது ரத்தம் சட்டமன்றத்துக்குள் போய், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ரஜினிகாந்த் ஒரு பாலமாக இருக்க வேண்டும். நான் 45 வருடம் இந்த சினிமா துறையில் சம்பாதித்த பெயர், புகழ், நல்ல அன்பு, நம்பிக்கை இதற்கு உதவும் என்று நம்புகிறேன். இது என்னுடைய 2-வது திட்டம் ஆகும்.
3-வது திட்டம் ரொம்ப முக்கியமானது. இந்தியாவில் தேசிய கட்சிகளை தவிர எல்லா மாநில கட்சிகளிலும் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருவரே தலைவராக இருப்பார். இப்படி இருக்கும் போது வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு மக்கள் எதுவும் கேட்க முடியாது. அவர்களிடம் கேள்வியே கேட்க முடியாது.
கட்சியில் இருந்து கேட்கலாம் என்று சொன்னால், கேட்பவரை கட்சியில் இருந்து தூக்கிவிடுவார்கள். கிட்டக் கூட சேர்க்கமாட்டார்கள். கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள். ஆக கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. கொள்கைகள் தான் கட்சி. அந்த கொள்கைகளை மக்களிடம் வாக்குறுதிகளாக கொடுக்கிறோம். தேர்தலை சந்திக்கிறோம். மக்கள் ஓட்டுப்போடுவார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எல்லா துறைகளிலும் அனுபவம் உள்ள வல்லுனர்களை கொண்டு ஒரு குழு உருவாக்கி, அதில் கட்சி தலைவர், தலைவனாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளை குழு பரிந்துரை செய்ததை செயல்படுத்த வேண்டும்.
அதுதான் ஆட்சியில் இருப்பவர்களின் வேலை. அது தலைமை செயல் அதிகாரி (சி.ஏ.ஓ.) பதவி போன்றது.
இதில் ரஜினிகாந்த் ஆட்சி தலைவரா? கட்சி தலைவரா? என்று வரும் போது நான் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. அப்படி நினைத்து பார்க்கவே முடியாது. சட்டசபையில் உட்கார்ந்து பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது என் ரத்தத்தில் வரவே இல்லை. 1996-ம் ஆண்டு பிரதமர் உள்பட பல பேர் அழைத்தார்கள். மூப்பனார், சிதம்பரம், சோ, நரசிம்மராவ் உள்பட பலர் திராவிட கட்சிகளை ஒதுக்குவதற்கு இது நல்ல வாய்ப்பு. நீங்கள் வாருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் முடியாது, மன்னித்துவிடுங்கள் என்று சொன்னேன். சோ எப்போதும் பாசிசம் என்று என்னை சொல்லுவார்.
நான் கட்சி தலைவராக இருப்பேன். கட்சி தலைவராக இருந்து, நல்ல ஒரு இளைஞராக, படித்தவராக, நல்ல சிந்தனை உள்ளவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவராக, அன்பு கொண்டவராக, பாசம் கொண்டவராக, தன்மானம் உள்ளவராக இருப்பவரை ஆட்சியில் உட்கார வைப்பேன்.
அவர் அரசை நிர்வகிப்பார். நம்முடைய கட்சி எதிர்க்கட்சி மாதிரி. அவர் என்ன தவறு செய்தாலும், முதலில் நாம் சுட்டிக்காட்டுவோம். யார் தவறு செய்தாலும், அதை சரி செய்வோம், திருத்துவோம். அப்படி செய்யவில்லை என்றால் ஆட்சி பதவியில் இருந்து கட்சி தலைமை தூக்கி எறியும்.
அதே மாதிரி அவர்களின் அன்றாட பணிகள், அரசை நிர்வகிப்பதில் கட்சி தலையிடாது. அது ஒரு சக்தியாகவும், இது ஒரு சக்தியாகவும் இணைந்து ஒரு அரசாக செயல்படாது. கட்சி ஆட்கள் யாரும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். அதனை நாம் பார்த்து கொள்வோம்.
அதேபோல், கட்சிகளின் விழாக்கள், பெரிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் ஆகியவற்றில் ஆட்சியாளர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. அதை கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும். இதுதான் எங்களுடைய திட்டம். இதை மக்கள் விரும்புவார்கள், பாராட்டுவார்கள். மாற்று அரசியலைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன்.
நான் ஒரு படத்தில் நடிக்கும் போது கூட, ஒரு சினிமா கதையை 10 பேரிடம் சொல்வேன். இவ்வளவு பெரிய தேர்தல், 7 கோடி மக்களின் வாழ்க்கை. இப்போது சுவருக்கு கூட காதுகள் இருக்கிறது. சொன்னா எப்படி வெளியே போகும் என்று தெரியாது. அதனால் எனக்குள்ளேயே வைத்து காலம் நெருங்க, நெருங்க தேர்தல் நேரம் வரவர, இளைஞர்கள், சில அரசியல்வாதிகள், எனக்கு தெரிந்த சில எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சொன்னேன்.
இதனை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளவில்லை. பதவியில்லை என்று சொன்னால், யார் வருவார்கள் என்று சொன்னார்கள். பதவிக்காக வருவார்கள் என்றால் அது தேவையில்லை. பொது சேவைக்கு வருபவர்கள் வரட்டும். நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். மன்றத்தில் இருப்பவர்களும் பதவிக்கு ஆசைப்படாமல் வரவேண்டும். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நீங்களும் வர வேண்டும்.
இதை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இது எனக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது. இத்தனை வருடமா நான் நினைத்து கொண்டு இருக்கிறேன். இப்படி சொல்கிறார்களே? நான் வேற அறிவித்துவிட்டேனே? என்ன செய்வது? நம் மன்ற செயலாளர் களை அழைத்து, சம்மதம் பெற வைக்க முடிவு செய்தேன்.
முதல் 2 நாட்கள் நான் இதனை சொல்லவில்லை. கட்சியில் பதவி இல்லை என்றால் கோபம் ஏறிவிடும். எனவே படிப்படியாக சொல்லி, நான் முதல்-அமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என்று சொன்னதும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நானே ரசிகனாக இருந்திருந்தால் ஒத்துக்கொள்ளமாட்டேன் தான். தலைவர் சொல்வதை கேட்பவர்கள் தான் தொண்டர்கள். தொண்டர் சொல்வதை எல்லாம் கேட்பவர் தலைவர் இல்லை.
இந்த பூமி, தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்றது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்தபோது, மாநில கட்சி மாநிலத்தில் ஆட்சி புரிந்த மண் இது. 1960, 70-களில் நடந்த புரட்சி, மறுபடியும் 2021-ல் நடக்க வேண்டும். மக்கள் அதை செய்து காட்டுவார்கள். அவர்கள் நன்றாக இருப்பதற்கும், வருங்கால சந்ததிகள் நன்றாக இருப்பதற்கும், அவர்களுடைய மக்கள் நன்றாக இருப்பதற்கும் அதிசயம், அற்புதம் நடக்க வேண்டும்.
50 சதவீத பெண்களில் 20 சதவீதம் பேருக்குத் தான் யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என்று தெரியும். மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு அது தெரியாது. அப்படி அறிவில்லாமல் இருக்கிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும். நான் ஒரு துரும்புதான். இது நடக்கவில்லை என்றால், 10 முதல் 15 சதவீதம் ஓட்டை பிரிக்கிறதற்காகவா? நான் வர வேண்டும். பேசுகிறவர்கள் பேசட்டும். அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை.
இப்போது விட்டால் அப்புறம் பிடித்துக்கொள்ளலாம் என்பதற்கு எனக்கு என்ன 50 வயதா ஆகிறது? எனக்கு வயது 71. நான் பிழைத்து வந்திருக்கிறேன். இந்த தேர்தலில் விட்டால், அடுத்த தேர்தல் 2026 வரும். அப்போது எனக்கு வயது 76. இப்போது சொல்லும் கொள்கையைத்தான் அப்போதும் சொல்வேன். இப்போது ஏற்றுக்கொள்ளாதவர்கள்? அப்போது எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்?. ரசிகர்களுக்கு நான் இப்போது சொல்கிறேன். நான் முதல்-அமைச்சர் பதவிக்கு வருவேன் என்று சொல்வதை நிறுத்திவிட்டு, மூலை முடுக்கெல்லாம் மக்களிடம் போய் இதைச் சொல்லுங்கள். வருங்கால முதல்-அமைச்சர் என்று சொல்வதை நிறுத்துங்கள்.
நான் அரசியலுக்கு, கட்சிக்கு வருவேன் என்று சொல்லுங்கள். அந்த எழுச்சி முதலில் எனக்கு தெரியட்டும். அப்போது நான் வருகிறேன். இது இந்தியா முழுவதும் பரவ வேண்டும். கட்சிகளில் இருக்கும் தேவையில்லாத பதவிகள் நீக்கப்பட வேண்டும். புதிதாக இளைஞர்கள் வர வேண்டும்.
40 வயது முதல் 45 வயது இளைஞர்கள் அதிகாரத்துக்கு வந்து கையில் எடுக்க வேண்டும். கட்சி வேறு, ஆட்சி வேறு என்று நடக்க வேண்டும். இந்த புரட்சி இந்தியா முழுவதும் போய்ச் சேர வேண்டும். அரசியல், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதுமே இல்லை. இவ்வாறு அவர் பரபரப்பாக பேசினார்.
ரஜினிகாந்த் தனது கருத்துகளை கூறி முடித்தவுடன் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரிடம் கேள்வி கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் பேசி முடித்தவுடன், ‘நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தால், ‘என்னுடைய இந்த கருத்து, நோக்கம் சரியாக போய்ச் சேராது’ என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.
Related Tags :
Next Story