தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1,000, இலவச பொருட்கள் வினியோகம் தொடங்கியது
ரேஷன் கடைகளில் ரூ.1,000 பணம் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
சென்னை,
கொரோனாவால் ஏற்பட்டு உள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.1,000 பணம், இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. ஊரடங்கு காரணமாக மக்கள் கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்தும் விதமாக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் அதனை மக்கள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு சென்று பணம் மற்றும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜர் அறிவித்திருந்தார்.
ஆனால் அமைச்சரின் இந்த உத்தரவை பெரும்பாலான ஊழியர்கள் கடைபிடிக்கவில்லை. பொதுமக்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைத்து டோக்கன் வழங்கினர். ஒரு சில ஊழியர்கள் மட்டுமே வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.
இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் அடிப்படையில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் நேற்று வந்தனர். டோக்கன் வழங்கி அவர்களை வரிசையில் நிற்க வைத்து ரூ.1,000 பணம் மற்றும் ரேஷன் பொருட்களை ஊழியர்கள் வினியோகம் செய்தனர்.
மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் காலையில் 100 அட்டைதாரர்களுக்கும், மதியம் 100 அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டன. அட்டைதாரர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள ரேஷன் கடைகளில் காலை 150 அட்டைதாரர்கள் மாலையில் 150 அட்டைதாரர்கள் என பணம் மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டன.
கொரோனா நோய் தாக்கம் காரணமாக ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. எனவே மக்கள் 2 அடி இடைவெளிக்கு ஒருவர் வீதம் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். பெரும்பாலானோர் முககவசம் அணிந்து வந்தனர். ஒரு சிலர் துண்டு, கைகுட்டையை பயன்படுத்தினர். ஒரு சில பெண்கள் முந்தனையால் முகத்தை மூடியபடி வரிசையில் நின்றனர்.
சில கடைகளில் மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர். பின்னர் போலீசார் வந்து அவர்களை ஒழுங்குப்படுத்தினர். பொதுமக்களுக்கு பணம் மற்றும் பொருட்களை வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள் கையுறை, முககவசம் அணிந்து மிகவும் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டனர்.
ஊழியர்களும், பொதுமக்களும் கைகளை கழுவுவதற்கு கிருமி நாசினி மருந்துக்கள் பயன்படுத்தப்பட்டன. வெயிலின் தாக்கம் காரணமாக ஒரு சில கடைகளில் சாம்யானா பந்தல் போடப்பட்டிருந்தது. அனைத்து கடைகளிலும் சாம்யானா பந்தல் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் இன்று தொடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. வீட்டில் பணம் மற்றும் சமையல் பொருட்கள் இல்லாமல் தவித்த ஏழை- எளிய மக்களுக்கு தற்போது தற்காலிக ஆறுதல் கிடைத்து உள்ளது.
இதனிடையே சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story