கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம் - மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
தி.மு.க. அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தி.மு.க. விவசாய அணிச் செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சித் தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லாதது எனத் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் கே.பி.ராமலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. விவசாய அணி மாநிலச்செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார். கே.பி.ராமலிங்கத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் நீக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story