ரூ.1,000, உணவு பொருட்களை வாங்கவரும் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்பதை உறுதி செய்யவேண்டும் - அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ரூ.1,000 நிதி உதவியையும், உணவு பொருட்களையும் வாங்கவரும் பொதுமக்கள் உரிய இடைவெளிவிட்டு நிற்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நூலகராக இருப்பவர் வக்கீல் ஜி.ராஜேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால், தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 ரொக்கத்தையும், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஒய்.கவிதா, ‘பணத்தையும், உணவு பொருட்களையும் மக்கள் வாங்க நெருக்கமாக வரிசையில் நிற்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பலருக்கு பரவ வாய்ப்புள்ளது’ என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘நிவாரணத்தொகை மற்றும் உணவு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படுகிறது. இதன்படி 100 பேர் மட்டுமே ஒரே நேரத்தில், குறிப்பிட்ட இடைவெளிவிட்டு வரிசையில் நின்று ரொக்கப்பணத்தை பெற்றுச்செல்ல வேண்டும்.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வீடு வீடாக சென்று வழங்க முடியாது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவற்றின் எடை வித்தியாசப்படும் என்பதால், வீடுகளுக்கே சென்று அவற்றை வழங்குவது என்பது சாத்தியம் இல்லை. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடைகொண்ட உணவு பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மேற்கொள்ளும்’ என்று கூறினார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘ரேஷன் கடைகளில் உரிய இடைவெளிவிட்டு நின்று உதவி தொகையையும், உணவு பொருட்களையும் பொதுமக்கள் பெற்றுச்செல்வதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தீவிரமாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
இந்த வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story