கொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதயவது:-
ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அது முடிந்த பிறகுதான் இந்த நோயின் தன்மை அறிந்துதான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முடிவு செய்து அதற்கேற்றவாறு தேதி அறிவிக்கப்படும்.
தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்துவது குறித்து நீங்கள் தகவல் கொடுத்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே தமிழகத்தில் 10 லட்சம் சர்க்கரை அட்டைகள் இருந்தன. பலரிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்தது. எங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற வேண்டும் என்று. அரிசி குடும்ப அட்டைக்கு மாற விருப்பம் உள்ளவர்கள், சர்க்கரை குடும்ப அட்டையில் இருந்து அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை கொடுத்தோம். அந்த வகையிலே 4 லட்சத்து 51 ஆயிரம் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றி கொண்டார்கள். மீதமுள்ள 5 லட்சத்து 49 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் மாற்றம் செய்யவில்லை. நாங்கள் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தான் அரசு உதவி வழங்கும் என்று தெரிவித்திருக்கின்றோம். அந்த வகையிலே அவர்களுக்கு உதவிகளை வழங்குகிறோம்.
இந்த கடுமையான வெயிலிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில சாலைகள், பல்வேறு மாவட்ட எல்லைச் சாலைகள், இன்டர்-ஸ்டேட் எல்லை சாலைகளில் எல்லாம் காவல்துறையினர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘ஷிப்ட்’ முறையில் தான் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் 8 மணிநேரம் நிற்கிறார்கள். வெயிலில் கால்கடுக்க நிற்கிறார்கள். அதை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுமக்கள் தாங்களாக முன்வந்து, கட்டுப்பாட்டை விதித்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த சட்டம் போட்டாலும் அதை நிறைவேற்ற முடியும். ஒரு நாள், இரண்டு நாள் என்றால், நீங்கள் கூறுவதை போல அதிக காவலர்களை வைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். தொடர்ந்து 21 நாட்கள் என்று சொன்னால், அவர்களும் மனிதர்கள் தான், மனசாட்சியோடு நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கொள்வது எல்லாம், இந்த நோய் பரவி விட்டால் தடுக்க இயலாது. மிகப் பெரிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஜெர்மன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கிடைக்கப் பெற்ற பாடத்தை நாம் நன்கு உணர வேண்டும். இந்த நோய்க்கு இன்னும் மருந்தே கிடைக்கவில்லை, இருக்கின்ற மருத்துவ சிகிச்சையை வைத்து தான் நாம் காப்பாற்றி கொண்டு வருகிறோம். ஆகவே, நோயினுடைய வீரியத்தை, தாக்கத்தை உணர்ந்து, பொதுமக்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான வசதிகளை அ.தி.மு.க. அரசு முழுமையாக செய்து கொடுக்கும் என்பதை ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் கட்டணத்தில் சலுகைகள் ஏதாவது வழங்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். ஏற்கனவே மின்சார வாரியம் கடன் சுமையில் உள்ளது. கடுமையான நிதி சுமையில் இருப்பது மின்சார வாரியமும், போக்குவரத்து துறையும் தான். ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.1,300 கோடி நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆண்டிற்கு சுமார் ரூ.16 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இன்றைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சந்தித்து கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான், இந்த நோய் பரவலை தடுக்க முடியும். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போன்றோர் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே வருகிறது, சாதாரண மக்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வர வாய்ப்பு இருக்கிறது.
நோய் வந்தவுடனேயே, அதை குணப்படுத்துவதற்கு தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி சொல்லி கொண்டு இருக்கிறோம். இது ஒரு தொற்றுநோய். இந்த தொற்றுநோய் எளிதாக பரவக்கூடியது. ஆகவே, அரசு எடுக்கின்ற நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், நீங்கள் வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் வீடுதேடி வரும். ஆகவே, பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Related Tags :
Next Story