கொரோனா தடுப்புக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்புக்கு பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து பங்களிப்பினை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதியை பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை வழங்குமாறு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை கடந்த 23-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் மக்கள் நலம் பேணுதல், மேம்படுத்துதல், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தூய்மைப்பணி, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் நிதியும், பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பிற்கு தகுதி பெறும் என கூறி உள்ளது.
எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 24.3.2020 நாளிட்ட ஆணையின்படி, கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 30.6.2020 வரை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நன்கொடையை கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த நிதியின் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், மருத்துவமனைக்கு தேவைப்படும் நுகர்பொருட்கள் மற்றும் வெண்டிலேட்டர் முதலிய மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைபடுத்தப்பட்ட வசதி, பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பு சுகாதார பராமரிப்பு உருவாக்குதல், வீடற்ற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உணவளித்தல், உலர் உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
எனவே, பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வசதியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி அரசுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story