வர்த்தக சூதாட்டத்தை தடுக்க அரசின் நேரடி பொறுப்பில் உணவுப் பொருள் கொள்முதல், விற்பனை - இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை
வர்த்தக சூதாட்டத்தை தடுக்க அரசின் நேரடி பொறுப்பில் உணவுப் பொருள் கொள்முதல், விற்பனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பொது சுகாதார அவசர நிலை நெருக்கடி ஏற்பட்டதை உணர்ந்த மத்திய அரசு இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது. ஆட்கொல்லி நோய் தொற்று தடுப்புக்கால நிவாரணமாக சில உதவித் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. வாரியங்களில் பதிவு செய்யாத அமைப்புசார தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கொரோனா நோய் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். வேலையிழந்த தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், அமைப்புசாராத் தொழிலாளர், புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இக்கட்டான நேரத்தில் வயல்களில் விளைந்த வாழை, பலா போன்ற பழவகைகளும், காய்கறிகளும் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் வயலில் வீணாகி வருகின்றன. சந்தைக்கு வரும் பொருள்களை மிகக் குறைந்த விலையில் வாங்கும் வியாபாரிகள், பொதுமக்களிடம் அதிக விலைக்கு விற்கும் வர்த்தக சூதாட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதும் அரசின் நேரடி பொறுப்பில் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story