அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்


அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2020 1:41 AM IST (Updated: 11 April 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், வைகோ, ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் மட்டும்தான் அமைப்பு சார்ந்தவர்கள்; மீதமுள்ள 90 சதவீதம் தொழிலாளர்கள் அமைப்புசாராத தொழிலாளர்கள் என்பதிலிருந்தே கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்களின் வாழ்வில் எத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் அச்சம் பரவத் தொடங்கிய சில நாட்களிலேயே, அடித்தட்டு மக்களுக்கு அரிசி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவித்தது. கொரோனா வைரசின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணக்கிடுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த நிவாரண உதவிகள் போதுமானவையாக இருக்காது.

வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் இந்த உதவிகள் கிடைக்கும். பிற தொழிலாளர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்காது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்கள். வேலை இழந்த ஒரு சில நாட்களிலேயே அவர்களின் சேமிப்புகள் கரைந்திருக்கும் என்பதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியில் வாடிக்கொண்டிருக்கக்கூடும். அவர்களின் பசியைப் போக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நிவாரண உதவித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

அமைப்புசாரா தொழில்களுக்கு புத்துயிரூட்டுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழில்கள் ஏராளமாக இருந்தாலும் கூட, அவற்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் மிகவும் முக்கியமானவையாகும். அந்தத் துறைக்கு புத்துயிரூட்டினாலே இந்திய பொருளாதாரம் புத்தெழுச்சி பெறும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடனுதவி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஒருபுறம் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளையும், மறுபுறம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கொரோனா வைரசால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் முழுமையாக போக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 90 சதவீதம் பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்து இருப்பதாக ஐ.எல்.ஓ. (பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு) அறிக்கை எச்சரித்துள்ளது.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்திய தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கொரோனா கொள்ளை நோய் தடுப்பு காலத்தில் கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கை தொடர நினைத்தால் ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளிகள் போன்றோரின் குடும்பத்திற்கு உணவுப்பொருட்கள் இலவசமாக கிடைப்பதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story