தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 12 April 2020 5:00 AM IST (Updated: 12 April 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் என்றும், கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பாக ரூ.5 ஆயிரம், அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“கோவிட்-19” என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும், தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆதரவையும், ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு 2-வது நிலையில் இருந்து 3-வது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிலைமை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தபோதும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் விரைவாகவும், முழுமையானதாகவும் எடுக்கப்பட்டதா என்ற அய்யப்பாடு பெரும்பாலானோர் மனங்களில் இருந்து அகன்றபாடில்லை. சோதனை செய்வதற்கான “ரேபிட் டெஸ்ட் கிட்” கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கூட மத்திய அரசின் கண் அசைவிற்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

நோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன் அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

நோய்த் தாக்கம் அதிகமாகிவிடக் கூடாது என்று பெரிதும் விழைந்திடும் அதே நேரத்தில், ஒருவேளை அரசின் முயற்சிகளை எல்லாம் தாண்டி, தாக்கம் அதிகமாகிவிட்டால், அதனை எதிர்கொள்ள அவசர நிலை ஏற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் இருந்தாக வேண்டும். படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துதல், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உற்பத்தி அல்லது கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின்படி, மருத்துவப்பணியாளர்களைத் தொற்றில் இருந்து முற்றிலும் பாதுகாக்குமளவுக்குப் போதுமான வரையரைகளின்படி அமைந்திடவில்லை என்றும் அறியப்படுகிறது. இதில் கவனம் செலுத்துங்கள். தாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்கும், கொரோனா களப்பணியாளர்களுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை போன்றவற்றில் ஒளிவு மறைவு சிறிதுமின்றி வெளிப்படைத்தன்மை வேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை அதிகரிக்கும். முக்கியமான இந்த எண்ணிக்கைகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன.

‘தனித்திருத்தல்’ என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடி நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் வலியுறுத்தியுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆகவே, தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயார்படுத்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.

பாதிப்புக்குட்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையே ஆகும். சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இதுவரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அவற்றுடன் கொரோனா நோய்த் தொற்று பரவாத வகையில் முக கவசம், சானிடைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்ன வேண்டும்.

மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிந்துவிடவில்லை. கேட்ட நிதியைப் பெறுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைய வேண்டும். நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்திருப்பதை தமிழக அரசு வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.

இதேநேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை மாநில அரசும் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த முடிவை தவிர்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காகத்தான் அந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள். இது சட்டமன்ற உறுப்பினர்களின் தார்மீக உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட களப்பணியில் இருக்கும் எல்லாத் துறைகளையும் சேர்ந்த அனைத்துப் பேரிடர் காலக் களப்பணியாளர்களுக்கும், உரிய அளவில் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். இந்நேரத்திலும் ஒவ்வொரு நொடியும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகைகள், ஊக்க ஊதியங்கள் கொடுத்து அரசு காக்க வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களையும் அரசு ஊழியர்கள் போல இப்பேரிடர் காலத்தில் கருதி உதவிகள் செய்தாக வேண்டும்.

தி.மு.க. தயார்

அரசின் எச்சரிக்கையான முழுமையான நடவடிக்கைகளில்தான், மக்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. திறந்த மனதுடன், உண்மையான அக்கறையுடன், கனிவான மனதுடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும் தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

‘தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்’ மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க தி.மு.க. எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story