“மருத்துவர்கள் மீது பழியை போட்டு எடப்பாடி பழனிசாமி தப்பியோடப் பார்க்கிறார்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
மருத்துவர்கள் மீது பழியை போட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தப்பியோடப் பார்க்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தனது கோரமுகத்தை தமிழகத்திலும் காட்டி, நம் மக்களிடையே சீர்குலைவை ஏற்படுத்திவரும் வரும் நிலையில், தமிழக அரசு அவசர கதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பல தளங்களிலும் பேசப்பட்டுவரும் சில கருத்துகளை, முதல்-அமைச்சருக்கு கடிதமாக அனுப்பி இருந்தேன். அதற்குப் பதில் என்ற பெயரில் நீண்ட அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டிருக்கும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் நான் சித்தரிப்பதாக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். ‘அரசு எதுவும் செய்யவில்லை’ என்று நான் சொல்லவில்லை; ‘அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவோம்’ என்று தான் சொன்னேன். நோயின் தீவிரத்தை உணர்ந்து எந்த அளவுக்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்று தான் சுட்டிக்காட்டினேன். அதைக் கூட முதல்-அமைச்சரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; பொங்கி வழிகிறார். “யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை; எல்லாம் எனக்குத் தெரியும்; தானே எல்லாம்” என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைத் தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது.
அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று நான் முதலில் கோரிக்கை விடுத்தபோது, கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் 24-3-2020 அன்று அறிவித்துவிட்டு, தற்போது 8-4-2020 அன்று பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சேர்த்து மீண்டும் அறிவித்தது யார்?. ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அரசு தொடர்ந்து செயலாற்றுகிறது என்று வெளிக்காட்டும் முயற்சி இல்லையா?
24-3-2020 அன்று சட்டமன்றத்தில் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் ரூ.1,000 என்று கூறிவிட்டு, மறுநாள் தொலைக்காட்சி உரையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 என்று அறிவித்தது யார்? ஏன் இந்த குழப்பம்?.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்த நேரத்தில் 13 வகையான தொழிற்சாலைகளை திறக்க தலைமைச் செயலாளர் மூலம் உத்தரவு பிறப்பிக்க வைத்து, பிறகு சில மணி நேரத்தில் தொழிற்துறை முதன்மைச் செயலாளரை விட்டு தலைமைச் செயலாளர் உத்தரவை ரத்து செய்ய வைத்தது யார்?.
“இரு வருடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்றை தடுக்க பல கோடி ரூபாயை தி.மு.க. எம்.பி.க்கள் இந்த நிதியின் கீழ் ஒதுக்கியிருந்த போதிலும், இந்த நிதியை நிறுத்திய மத்திய அரசை ஒரு வார்த்தை கண்டிக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது யார்?. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியில் இருந்தும் ரூ.1 கோடி எடுத்துக்கொள்ளப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்து ‘இரட்டை வேடம்’ தரித்து நிற்பது யார்?.
தமிழக மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய சுகாதாரப் பேரிடர் பிரச்சினையில், சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி பிறகு சுகாதாரச்செயலாளரை முன்னிலைப்படுத்தி அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றி கழுத்தறுப்பு அரசியல் செய்து கொண்டிருப்பது யார்? எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்.
ஒடிசா, மேற்கு வங்கம், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையிலும், பா.ஜ.க. ஆளும் கர்நாடகம் முடிவெடுத்துவிட்ட பிறகும், “தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று நான் விடுத்த வேண்டுகோள் முதல்-அமைச்சருக்கு அரசியலாகத் தெரிகிறது.
ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? ‘கொரோனாவை’ முழுமையாக ஒழித்துவிட்டாரா? மத்திய அரசு என்ன நினைக்குமோ என்று உள்ளூர பயம் தான் காரணம்.
மத்திய அரசிடம் கேட்க தைரியம் இல்லை மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியை காப்பாற்றிக் கொள்ள உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்த சுயநலத்தாலும், கோழைத்தனத்தாலும் தமிழகம் இழந்த பெருமைகள் எத்தனையோ உண்டு. இப்போது உயிர்களையும் இழக்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் மக்களை பார்த்து நிதி கொடுங்கள் என்று அறிக்கை விட்டு கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்.
கொச்சைப்படுத்தினேனா?
நாடே துயரத்திலும், பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கும் வேளையிலே, ஆத்திரமும், ஆவேசமும் சத்ருவாகிவிடும் என்பதை உணர வேண்டும். பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நான் வைத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். எது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை அவரது பதிலில் தேடிப்பார்த்தேன்; கண்டுபிடிக்க முடியவில்லை.
“எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு-பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது” என்கிறார் முதல்அமைச்சர்.
நான் வைத்துள்ள கோரிக்கைகள், ஆலோசனைகள் தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சருக்கும் தானே தவிர மருத்துவர்கள் மீதல்ல. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என களத்தில் நிற்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் சில மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது என்ற கவலையில்தான் சொன்னேன். அதை உணராமல் தன் மீது விழும்பழியை துடைத்துக் கொள்ளும் வழி அறியாது, மருத்துவர்கள் மீது போட்டு தப்பி ஓடப் பார்க்கிறார் முதல்-அமைச்சர். அரசியலை பேசுவதற்கான நேரம் இதுவல்ல;அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும்.
கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது. கொரோனா காலம் முடிந்த பிறகே அரசியல் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவில் ஏந்தி நடக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story