மே 3ந்தேதிக்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்கும் விவகாரம்; அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு


மே 3ந்தேதிக்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்கும் விவகாரம்; அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு
x
தினத்தந்தி 1 May 2020 11:38 AM IST (Updated: 1 May 2020 11:38 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடிவுறும் மே 3ந்தேதிக்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

சென்னை,

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  எனினும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பாதிப்புகளில் இருந்து தமிழகம் விடுபடும் என கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களை அரசு அமைத்துள்ளது.  இந்த குழுக்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி கடந்த செவ்வாய் கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையில், மே 3ந்தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் பேசும்பொழுது, மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றன.  அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம்.  கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.  இதற்கு பின் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்குவது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  கூட்டத்தில், தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story