சென்னையில் போலீசாரை குறி வைக்கும் கொரோனா மேலும் 6 போலீஸ்காரர்களை தாக்கியது


சென்னையில் போலீசாரை குறி வைக்கும் கொரோனா மேலும் 6 போலீஸ்காரர்களை தாக்கியது
x
தினத்தந்தி 3 May 2020 4:15 AM IST (Updated: 3 May 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீசாரை குறி வைத்து தாக்குவது போன்று கொரோனா தாக்குகிறது. மேலும் 6 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சென்னை, 

சென்னையில் கொரோனாவின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 2 ஆயிரத்து 757 பேர் ஆளாகி உள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 1,257 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட தெருக்கள், இடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பணி ஒருபுறம் இருக்க மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தல், வாகன சோதனை மேற்கொள்ளுதல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் கண்ணுக்கு தெரியாத ‘கொரோனா’ வைரஸ், போலீசாரை குறி வைத்து தாக்கி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் வரை 12 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

மேலும் 6 போலீசார் பாதிப்பு

இந்தநிலையில் மதுரவாயலில் குழந்தை பெற்றெடுத்து ஒரு மாதமே ஆன பெண் போலீஸ்காரர், புதுப்பேட்டை ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீஸ் மற்றும் ஆண் போலீஸ்காரர், ஓட்டேரி போலீஸ்காரர், டி.ஜி.பி. அலுவலகத்தில் இயங்கும் மாநில உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறை போலீசார் 2 பேர் என மொத்தம் 6 போலீசார் நேற்று கொரோனாவின் பிடியில் சிக்கினர்.

அவர்கள் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும்கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு அறை மூடல்

சென்னையில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே டி.ஜி.பி. அலுவலக மாநில உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் போலீசார் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Next Story