தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா - பச்சிளம் குழந்தைக்கும் பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா - பச்சிளம் குழந்தைக்கும் பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 5:00 AM IST (Updated: 3 May 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பிறந்து 14 நாளேயான பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தார். சென்னையில் இதுவரை 1,257 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 9 குழந்தைகள் உட்பட 231 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று திருநங்கை ஒருவருக்கும் கொரோனா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் திருநங்கைக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,828 ஆண்களும், 928 பெண்களும், ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 158 ஆண்களும், 72 பெண்களும், சென்னையை சேர்ந்த 48 வயதான ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று 1,341 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 29 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனையில் 1,384 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 14 நாள் பெண் குழந்தை உட்பட 9 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 37 பேர் முதன்மை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

நேற்று சென்னையில் 3½ வயது ஆண் குழந்தை உட்பட 6 குழந்தைகள் மற்றும் 168 பேரும், அரியலூரில் 4 வயது ஆண் குழந்தை உட்பட 18 பேரும், காஞ்சீபுரத்தில் 14 நாள் பெண் குழந்தை உட்பட 13 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், செங்கல்பட்டில் ஒரு பெண் உட்பட 5 பேரும், விழுப்புரம், திருப்பூர், ராமநாதபுரம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கோவை, மதுரை, சேலம்(கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு சேலத்தில் பாதிப்பு), தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் நேற்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 76 வயது பெண் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக(ஹாட்ஸ்பாட்) உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் பச்சை மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 159 குழந்தைகளும், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 2,319 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 280 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு சேலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story