வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர்


வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 3 May 2020 12:50 PM IST (Updated: 3 May 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ளவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,301 ஆக அதிகரித்துள்ளது. 10,633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,204 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல பாஸ் வாங்குவது குறித்து இன்று விரிவான அறிவிப்பு வெளியாகும். வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர்  https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. 

வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் பாஸ் வாங்கிக் கொடுக்கலாம். இங்கு வந்து சிக்கி தவிப்பவர்களுக்கு பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

தனிக்கடைகள் பட்டியலில் டீக்கடைகள், பேன்சிக் கடைகள் ஆகியவை இடம்பெறாது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லூரிகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. படிபடியாக பள்ளிகள், திருமண மண்டபங்களிலும் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.

மாநகராட்சியில் உள்ள 750 திருமண மண்டபங்களிலும் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் 10 ஆயிரம் படுக்கைகளும், மே மாதத்திற்குள் 50 ஆயிரம் படுக்கைகளும் தயார் படுத்தப்படும்.  வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை முகாமில் மட்டுமே 5000 பேர் உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப செல்ல முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story