கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம்: ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது


கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம்: ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 4 May 2020 2:55 PM IST (Updated: 4 May 2020 2:55 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. சென்னையில் சாலைகள், கடைகள் திறக்கப்பட்டது.

சென்னை

கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சென்னையில் இதுவரை 1,458 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையிலேயே அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 324 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக இராயபுரம் மண்டலத்தில் 275 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 199 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தேனாம்பேட்டையில் 166 பேர், அண்ணா நகரில் 130 பேர், தண்டையார்ப்பேட்டையில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 68 பேரும், திருவிகநகர் மண்டலத்தில் 34 பேரும் குணமடைந்துள்ளனர். இதுவரை சென்னையில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்கியுள்ளன.

அந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன. இதையடுத்து சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம் இருசக்கரவாகனங்களில் ஒருவருக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தியாகராய நகரில் அனைத்து சிக்னல்களும் வழக்கம் போல் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியாக அமைந்துள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Next Story