முதல்-அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு கொரோனா? - போலீசார் விளக்கம்


முதல்-அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு கொரோனா? - போலீசார் விளக்கம்
x
தினத்தந்தி 7 May 2020 10:00 PM GMT (Updated: 7 May 2020 8:52 PM GMT)

சென்னையில் முதல்- அமைச்சர் வீட்டில் காவல் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்பது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர்.

சென்னை,

இது தொடர்பாக கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்- அமைச்சர் வீட்டில் காவல் பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் (ஏட்டு) ஜெயந்தி, முதல்-அமைச்சரின் இல்லத்தில் காவல் பணியில் ஈடுபடவில்லை. முதல்-அமைச்சரின் இல்லம் அருகே உள்ள கிரீன்வேஸ் சாலையில்தான் ஏப்ரல் 30-ந் தேதி வரை காவல் பணியில் இருந்தார்.

அதன்பிறகு மே 3-ந்தேதி அன்று பரிசோதனை செய்ததில் தலைமை காவலர் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அவரைப்பற்றி வந்த செய்தியில் உண்மை இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story