சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்து நீக்கம்
விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கலியபெருமாள், முருகன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபால். இவரது மகளான 15-வயது சிறுமி ,அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், கலிய பெருமாள் மற்றும் முருகன் என்ற இருவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், இந்த இரக்கமற்ற படுபாதக செயலில் இருவரும் ஈடுபட்டனர்.
இதில், பலத்த தீக்காயம் அடைந்த சிறுமி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து உள்ளார். தன்னை, இருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சிறுமி மரண வாக்குமூலம் அளித்ததையடுத்து, கலிய பெருமாள், முருகன் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முருகன் (வயது 51) மற்றும் கலியபெருமாள் (வயது 60) ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி பொறுப்பில் இருந்து கே. முருகன் மற்றும் புதுக்காலனி கிளைக் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து கலிய பெருமாள் நீக்கப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story