ஊரடங்கில் இருந்ததை போல சில மாதங்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு, ஆர்.சரத்குமார் வேண்டுகோள்
ஊரடங்கில் இருந்ததை போல சில மாதங்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, ஆர்.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பினால் சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதாவது, கொரோனா பரிசோதனைகளை வெளிப்படை தன்மையுடன் துரிதப்படுத்துவதுடன், நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறதா? என்பதை உறுதிசெய்ய மாவட்டம் வாரியாக கலெக்டரின் தலைமையில் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பகுதி நேரமாக, சுழற்சி முறையில் வகுப்புகளை சமூக இடைவெளிவிட்டு மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அறிகுறியின்றி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள விரும்பி தாமாக முன்வந்தால் மருந்துகள், முக கவசங்கள், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் சத்து உணவுகள் அடங்கிய 15 நாட்களுக்கு தேவையான சிறப்பு தொகுப்பை வழங்குதல் வேண்டும்.
அரசு எந்த முடிவு எடுத்தாலும், ஊரடங்கின் போது ஒற்றுமையாக வீட்டில் இருந்ததைபோல, சுய கட்டுப்பாட்டோடும், பாதுகாப்போடும் தீவிரமாக சமூக இடைவெளியை மேலும் சில மாதங்களுக்கு தவறாமல் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story