தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அம்பன் புயலின் காரணமாக 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் அம்பன் புயலின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம்,திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடதமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை அம்பன் புயலாக வலுப்பெற்று வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் தீவிர புயலாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைந்தது. இது இன்று இரவோ அல்லது நாளை காலையோ அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்
இதன்காரணமாக 17-ம் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 80-90 வரையிலும் இடையிடையே 100 கி.மீ வரையிலும் வீசக்கூடும்.
18-ம் தேதி மத்திய வங்கக்கடலில் தென் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 125-135 கி.மீ வரையிலும் இடையிடையே 150 கி.மீ வரையிலும் வீசக்கூடும்.
19-ம் தேதி மத்திய வங்கக்கடலில் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 160கி.மீ வரையிலும் இடையிடையே 190 கி.மீ வரையிலும் வீசக்கூடும்.
20-ம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 170-180 கி.மீ வரையிலும் இடையிடையே 200 கி.மீ வரையிலும் வீசக்கூடும். கடல் மிகசீற்றத்துடனும் இடைஇடையே அதி சீற்றத்துடன் காணப்படும். இதன்காரணமாக மீனவர்கள் 20-ம் தேதி வரை மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று தமிழகத்தில் வேலூர் அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
Related Tags :
Next Story