தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்-50 சதவீத ஊழியர்கள் பணிபுரிவார்கள்


representational image
x
representational image
தினத்தந்தி 18 May 2020 2:08 AM GMT (Updated: 18 May 2020 2:10 AM GMT)

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

சென்னை,

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில்,  பல்வேறு தளர்வுகளுடன் 4-ஆம் கட்ட இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

*ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும்.

*அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். முதல் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினர் பணியாற்றுவார் கள். புதன்கிழமை, வியாழக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும்; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

*அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் இரண்டாம் பிரிவினரும், புதன்கிழமை, வியாழக்கிழமையில் முதலாம் பிரிவினரும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

*இந்த மாற்று வேலைத் திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைத்தால் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

*அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் பணிக்கு வர தயாராக இருப்பதோடு, மின்னணு முறை தகவல் பரிமாற்றத்தையும் ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.

*தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங் கள், ஆணையங்கள், வாரியங் கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.

*போலீஸ், மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.


Next Story