திருப்பூரில் ரூ.337 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


திருப்பூரில் ரூ.337 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 19 May 2020 3:00 AM IST (Updated: 19 May 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரூ.337 கோடியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை, 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூர் கிராமத்தில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை, கரூரில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள நல்லூர் கிராமப்பகுதியில் சுமார் 11.28.0 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைய உள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரி நிறுவிட, மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பாக ரூ.195 கோடி நிதியை வழங்கும். எஞ்சிய ரூ.141 கோடியே 96 லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி நிறுவிட ரூ.336 கோடியே 96 லட்சம் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒப்பளிப்பு செய்தும் 12.11.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் உள்பட உணவுப்பொருட்களை சேகரித்து வினியோகம் செய்த 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இடைநிலை மூலதன கடன் உதவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக் கண்ணு, தலைமைச்செயலாளர் க.சண்முகம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு, நாப்கிசான் முதன்மை நிதி அலுவலர் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story