ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு


ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு
x
தினத்தந்தி 27 May 2020 6:36 AM GMT (Updated: 27 May 2020 6:36 AM GMT)

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களையே நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30ந்தேதி நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் இன்று காணொலி காட்சி வாயிலாக வழங்கினர்.

அதில், ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.  இதுபற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரை 2ம் நிலை வாரிசுகளாக அறிவித்து உள்ளது.

தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட நீதிமன்றம், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றி கொள்ள பரிந்துரை வழங்கியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

Next Story