தென்காசி பெண் போலீசுக்கு கத்திக்குத்து; கணவர் கைது


தென்காசி பெண் போலீசுக்கு கத்திக்குத்து; கணவர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2020 2:07 AM IST (Updated: 2 Jun 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீசை கத்தியால் குத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் கண்ணன்(வயது 35). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சிவராணி (29). திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் தனஸ்ரீ என்ற மகள் உள்ளாள். இவர்கள் ஆயுதப்படை வளாகம் திருநகரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து சிவராணியின் கையில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் நல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஊரக போலீசில் அவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story