பக்தர்களுக்கு அனுமதி இல்லை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் - அறநிலையத்துறை உத்தரவு


பக்தர்களுக்கு அனுமதி இல்லை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் - அறநிலையத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2020 2:00 AM IST (Updated: 3 Jun 2020 10:53 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்களுக்கு அனுமதி இல்லை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு அளித்துள்ளார்கள்.

சென்னை,

வைகாசி விசாகம் திருநாளையொட்டி முருகன் கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, வீட்டில் இருந்தபடியே முருக பெருமானை வணங்க வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

‘வைகாசி விசாகம்’ என்றும் அழைக்கப்படும் வைகாசி விசாகம் நட்சத்திரம், முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் மற்றும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு சிறப்பாக வைகாசி விசாகம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம்.

அந்தவகையில் நடப்பாண்டு விசாக நட்சத்திரம் திதி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.40 மணி வரை இருக்கிறது. ஆனால் தற்போது, கொரோனா நோய் தொற்று பரவி வருவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமியையொட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால், இணையதளம் மூலம் ஒளிபரப்பவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story