மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு


மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 5:15 AM IST (Updated: 4 Jun 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 3 ஆயிரத்தில் 539 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,244 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 27 பேருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நேற்று மொத்தம் 1,286 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 787 ஆண்களும், 498 பெண்களும், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையை சேர்ந்த 80, 75, 68, 63, 50 வயது ஆண்களும், 58 வயது பெண்ணும், திருச்சியை சேர்ந்த 70 வயது பெண்ணும், செங்கல்பட்டை சேர்ந்தை 48 வயது ஆணும், காஞ்சீபுரத்தில் 60 வயது ஆணும் பல்வேறு நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையை சேர்ந்த 66, 47 வயது ஆண்கள் 2 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 610 பேர் நேற்று குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,012 பேரும், செங்கல்பட்டில் 61 பேரும், திருவள்ளூரில் 58 பேரும், திருவண்ணாமலையில் 21 பேரும், காஞ்சீபுரத்தில் 19 பேரும், தூத்துக்குடியில் 17 பேரும், நெல்லையில் 12 பேரும், கோவையில் 9 பேரும், மதுரையில் 7 பேரும், கடலூர், தஞ்சாவூரில் தலா 6 பேரும், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூரில் தலா 4 பேரும், சேலத்தில் 3 பேரும், திருவாரூரில் 2 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் இடம் பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 59 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 185 முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 108 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 27 பேரும், ரெயில் மூலம் வந்த 245 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,344 பேர் என மொத்தம் 1,724 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 14 ஆயிரத்து 101 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 173 மாதிரியில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 489 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story