கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்; முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை.
கூடியவரை, அவசியமின்றி வெளியில் செல்வதனை மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். இந்த வருடம் ஜனவரி முதல் செயல்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டேன். கொரோனாவால் நம் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பாதிப்படைந்து உள்ளது.
கடந்த ஜூன் 4ந்தேதி வரை தமிழகத்தில் 5.5 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. நாட்டிலேயே அதிக அளவாக 72 மையங்களில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். உயிரிழப்பு சதவீதம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே தமிழகத்தில் மிக குறைவு. இதேபோன்று சிகிச்சை பெற்று குணமடைந்தோர் சதவீதம் ஒப்பீட்டு அளவில் தமிழகத்தில் அதிகம் ஆகும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story