குமரி மாவட்டத்தில் தொடர் மழை தண்டவாளத்தில் மண் சரிவு; பார்சல் ரெயில் ரத்து


குமரி மாவட்டத்தில் தொடர் மழை தண்டவாளத்தில் மண் சரிவு; பார்சல் ரெயில் ரத்து
x
தினத்தந்தி 8 Jun 2020 8:30 PM GMT (Updated: 8 Jun 2020 5:15 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பார்சல் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

அழகியமண்டபம்,

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அத்துடன் பார்சல் ரெயிலும் இயங்குகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இரணியல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இதில் பூங்கரை பகுதியில் மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. தண்டவாளத்தில் 50 மீட்டர் முதல் 60 மீட்டர் நீளத்திற்கு பெரிய கற்கள், மண் சரிந்து கிடந்தது. இரவு நேரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இதை கண்டு இரணியல் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் பார்சல் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

நேற்று காலையில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. எனவே, வீடுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் மண் அகற்றும் பணி மெதுவாக நடந்தது. பயணிகள் ரெயில் போக்குவரத்து தற்போது இல்லாததால் மண்சரிவு ஏற்பட்ட போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாள சீரமைப்பு பணி முழுமையாக முடிவடைந்த பின்பு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story