தேற்றிக்கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில் நான் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? மு.க.ஸ்டாலின் உருக்கம்


தேற்றிக்கொள்ள முடியாமல்  தேம்பி அழும் நிலையில் நான் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? மு.க.ஸ்டாலின் உருக்கம்
x
தினத்தந்தி 11 Jun 2020 5:30 AM IST (Updated: 11 Jun 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில் நான் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்?, என ஜெ.அன்பழகம் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின் உருக்கம் நிறைந்த இரங்கல் வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பு சகோதரா அன்பழகா...

என் அன்பு சகோதரா அன்பழகா... இனி என்று காண்போம் உன்னை. இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கருணாநிதியின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க, தி.மு.க. முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

தேம்பி அழும் நிலையில் நான்...

கட்சியின் ரத்தம் பாய்ந்த உடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில் அன்பழகன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?.

திராவிட இயக்கம் மறவாது

அவரது பொதுவாழ்வு கழகப்பணி தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கட்சியின் தீரமிக்க உடன்பிறப்பு, மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கட்சியின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உருவப்படத்துக்கு அஞ்சலி

மரணம் அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உருவப் படத்திற்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம் என கர்ஜிப்பார்

பின்னர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சமூக வலைத்தள பக்கங்களில் காணொலி ஒன்றையும் வெளியிட்டார். அதில் மு.க.ஸ்டாலின், “என்னுடைய இளமைக்காலம் முதலே, என்னோடு தோளோடு தோள் நின்ற தோழன், ஜெ.அன்பழகன். செயல்வீரனாக மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சிங்கம் என கர்ஜிப்பார். தன் உடல்நிலையை பற்றிக்கூடக் கவலைப்படாமல் உற்சாகத்துடன் தொய்வே இல்லாமல் பணியாற்றியவர் அன்பழகன். தலைமை கழகத்தால் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டால், அதனை தலைநகர் சென்னையில் கம்பீரமாக நடத்திக் காட்டுபவர் அன்பழகன். அவர் போடும் மேடைகள் எல்லாம் காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த மேடைகளும் அன்பழகனைப் போலவே கம்பீரமாக இருக்கும். தி.மு.க.வின் தீரமிக்க உடன்பிறப்பு ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது உன் திருமுகத்தை!“ என்று பேசி உள்ளார்.

ராணுவ வீரரின் தியாகம்

மேலும், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கொரோனா தடுப்பு பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகனின் தியாகம் அவரது தியாக வாழ்வைப் போற்றுவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story