தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டது கொரோனா தொற்று: 1,875 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி


தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டது கொரோனா தொற்று:  1,875 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2020 1:28 PM GMT (Updated: 2020-06-11T18:58:48+05:30)

தமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  சென்னையில், குறிப்பிடும்படியாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 16,829 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதுவரை 6.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் மேலும் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 20 ஆயிரத்து 705 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841ல் இருந்து 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு என்பது இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 6 நாட்களில் 117 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Next Story