மக்களுக்கான பணியை தொடரும் போது மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் - தி.மு.க. தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


மக்களுக்கான பணியை தொடரும் போது மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் - தி.மு.க. தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 12 Jun 2020 5:00 AM IST (Updated: 12 Jun 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கான பணியை தொடரும்போது மிகுந்த பாதுகாப்பு, கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், மக்கள் பணிக்குத் தன் இன்னுயிர் தந்து நம் கண்களைக் கடலாக்கி, நெஞ்சத்து வானத்தில் என்றும் மறையாத சூரியனாகச் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார். ஊரடங்கால், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த ஏழை மக்களின் பசித்துயர் போக்கிட தி.மு.க. களமிறங்கிச் செயலாற்றியது.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்த போதும், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு, ஜூன் 2-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடும் உயிர்ப் போராட்டம் நடத்தினார். ஆனாலும் நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். ஒரு பேரிடர் நேரத்தில், தன்னைப் பற்றியோ தனது உடல் நலன் பற்றியோ கவலைப்படாமல், களத்தில் நின்ற மாவீரனாக மக்கள் மனதில் நெடிதுயர்ந்து வாழ்கிறார். தியாக சுடராக, அவரது குடும்பத்தில் மட்டுமல்ல கட்சியினர் இல்லங்களில் எல்லாம் ஒளி விடுகிறார்.

நெருக்கடிகள், இடர்ப்பாடுகள், சூறாவளிகள், சுனாமிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிலைத்திருக்கும் இந்த இயக்கத்தின் அடித்தளமே ஜெ.அன்பழகன் போன்ற செயல்வீரர்கள்தான். பிறந்தநாளிலேயே மரணம் எய்திய அவர், பல உடன்பிறப்புகளின் மனதில் புதிய வலிமையை ஊட்டியிருப்பதைக் காண்கிறேன். அவர்களின் உணர்வில், ஜெ.அன்பழகனை உயிர்ப்புடன் காண்கிறேன்.

ஒவ்வொரு கட்சி தொண்டரும் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகின்ற அதேவேளையில், மக்களுக்கான நம் பணியினைத் தொடரும்போது, இந்த நோய்த்தொற்று காலத்தில் மிகுந்த பாதுகாப்புடன் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன். மக்களுக்கான தியாக இயக்கம் தி.மு.க. என மரண சாசனம் எழுதிச் சென்றிருக்கும் மாவீரன் ஜெ.அன்பழகனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசும், தமிழக அரசும் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயாகவும், டீசல் விலை 4.93 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.

‘தினம் ஒரு தகவல்’ போல் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசு ஒரு புறம் ஊரடங்கு தளர்வு என அறிவித்து விட்டு, இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று மக்களை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களில் அனைத்து பயன்களையும் அள்ளி எடுத்துக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு விலை உயர்வை மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?. பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story